25 வருடங்களிற்கு மேலாக காரைநகர் இந்துக் கல்லூரியில் ஆசிரியராக பணியாற்றிய எங்கள் ஆசிரியை நாகபூஷணம் ரீச்சர் அவர்களிற்கு ‘எனது ஊர் காரைநகர்” சார்பிலும் மலராஞ்சலியை சமர்ப்பித்து அவர் பணியாற்றிய காலங்களில் சகஆசிரியராக பணியாற்றிய திரு ளு.மு.சதாசிவம் அவர்கள் வழங்கிய அஞ்சலி மடலினை இங்கே எடுத்து வருகின்றோம். சிதம்பரப்பிள்ளை பார்வதிப்பிள்ளை தம்பதிகளுக்கு ஏகபுத்திரியாக 21.05.1932ல் மலேசியாவில் நாகபூசணி அம்மையார் பிறந்தார்.
மலேசியாவில் கல்வி பயின்ற அமரரின் கல்வி இரண்டாம் உலகப் போர் காரணமாக 4 ஆண்டுகள் தடைப்பட தொடர்ந்து கல்வியை யாழ் இந்து மகளிர் கல்லூரியில் கற்று இடைநிலைக்கல்வியை நிறைவு செய்தார். உயர் கல்வியை திருச்சி HOLY CROSS CONVENT விஞ்ஞானப் பிரிவில் கற்க ஆரம்பித்து செய்முறைப் பாடங்களுக்கு நெருப்புக் காய்ச்சல் காரணமாக உரிய காலங்களில் கலந்துகொள்ள போகமுடியாமையினால் கலைப்பிரிவுக்குமாறி அரசியல் பொருளாதாரப் பட்டதாரியானார். பெற்றோர் விருப்பப்படி வைத்திய கலாநிதி செ. தியாகராசாவை திருமணம் செய்தார்.
1960களில் காரை இந்துக் கல்லூரியில் நியமனம் பெற்ற நாள் முதல் 1989ல் காரை இந்துக் கல்லூரியில் இருந்து ஓய்வு பெறும் வரை ஆசிரியப்பணியை ஏற்ற இறக்கம் இன்றி சீரான முறையில் ஆற்றியவர். என்றுமே தன் கடமையில் தவறியதில்லை. நிறைவான கல்வியை வழங்குவதன் மூலம் உயர்வான சமூகம் ஒன்றினை காண விளைந்தவர். மாணவர்கள் நல்வாழ்வு பெறும் நோக்குடன் கல்வியை சீரிய முறையில் வழங்குவதில் உளமார்ந்தஅக்கறையுடன் செயற்பட்டவர்.
அமரர் பால் கொண்டிருந்த அபிமானம் காரணமாக மூளாய் கிராமத்து மாணவர்கள் காரைநகர் இந்துக் கல்லூரியில் கல்வி கற்று கல்லூரிக்கு புகழ் சேர்ந்தனர். அன்னார் வலந்தலை சந்தியிலிருந்து பேரூந்தில் இருந்து இறங்கி வரும் போதும், மீண்டும் செல்லும் போதும் மாணவர்கள் அவரை சூழவருதல் ஒரு காட்சி.
சகல மாணவர்களினதும் அப்பியாசப் புத்தகங்கள் வகுப்பறையில் பார்வையிடப்படும். தவறின் ஓய்வு நேர பாட வேளைகளில், சில சமயங்களில் வீட்டுக்கு எடுத்துச் சென்று பார்வையிடப்பட்டு வழங்கப்படும்.
தமிழ்மொழி, தமிழ் இலக்கியம், சைவசமயம் ஆகிய பாடங்களை கற்பிப்பதில் பாண்டித்தியம் பெற்றவர். க.பொ.த.சா.த பரிட்சையில் ஏனைய பாடங்களில் சித்தி பெற தவறியவர்களும் இம் மூன்று பாடங்களில் சித்தி அடைவது அன்னாரின் கற்பித்தலுக்கு ஒரு சான்று. தவறுகளுக்கான தண்டனைகள் அளவுடனும், தவறினைத் திருத்திக் கொள்வதற்கான ஆலோசனைகளும், ஓரே சமயத்தில் வழங்கப்படும். மாணவர்களுடன் கண்டிப்புடன் அதே சமயம் அன்பும், பாசமும் செலுத்தும் மனப்பக்குவம் உடையவர்.
கற்பித்தல் பணியுடன் நின்று விடாது மாணவர்களின் தனிப்பட்ட நலன்களிலும் அக்கறை மிக்கவர். மாணவர்களின் பிரச்சினைகளை அறிந்து, இனங்கண்டு ஆலோசனைகள் வழங்குவார். மாணவர்களின் பிரச்சினைகளை பகிரங்கப்படுத்தாது. இரகசியத்தன்மையை பேணி தீர்த்து வைக்கும் பண்பாளர். பாடசாலை ஒழுக்காற்று குழுவின் நீண்டகால அங்கத்தவர். அமரர் கலாநிதி.ஆ.தியாகராஜாவின் நன்மதிப்பை பெற்றவர்.
அமைதியான அழகு, ஆழ்ந்த ஊடுருவிச் செல்லும் பார்வை, அரச பணியாற்றும் மகளிருக்கான நடை, உடை, பாவனை அணிகலன்கள் என்பனவற்றுக்கு முன் உதாரணமானவர்.
அமரர் நாகபூசணி அம்மை மூளாய் கிராமத்தை வதிவிடமாக கொண்டிருந்த பொழுதிலும் காரைநகர் இந்துக்கல்லூரியில் ஆறு;றிய பயனுறு கல்விப்பணி காரணமாக காரைநகர் கிராம மாணவர்களின் மனங்களைக் கவர்ந்தவர். பெற்றோர்களின் மதிப்பை பெற்றவர். தனக்கென ஒரு முத்திரை பதித்தவர்.
அன்னாரின் ஆத்மா காரைநகர் திண்ணப்புர பகுதியில் திரு நடனம் செய்யும் தில்லைக்கூத்தனின் திருப்பாதங்களை சென்றடைய பிராத்திக்கின்றேன்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
எஸ்.கே.சதாசிவம்